புத்ராஜெயா, 06 ஜூலை 2026 : நாட்டின் கண்ணியத்தையும் முன்னேற்றத்தையும் உயர்த்த, நேர்மை, ஒழுக்கம் மற்றும் உயரிய விழுமியங்களைப் பின்பற்றும் குடிமக்களை உருவாக்குவது அவசியம் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். தாம் தலைமையேற்ற தேசிய பேரவை கூட்டத்தில் உரையாற்றிய அவர், தேசிய விழுமியங்களை சமூகத்தில் ஆழமாக வேரூன்றச் செய்வதன் மூலம், மக்களிடையே தேசப்பற்று உணர்வை மேலும் வலுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
தேசிய சேவைப் பயிற்சித் திட்டத்தின் (பிஎல்கேஎன்) செயல்பாட்டு முன்னேற்றம் குறித்த விளக்கத்தையும் கேட்டறிந்ததாகக் குறிப்பிட்ட அவர், இந்தத் திட்டத்திற்கு பங்கேற்பாளர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இளைஞர்களின் தனித்திறன், ஒழுக்கம் மற்றும் நாட்டுப்பற்றை வளர்க்கும் முக்கிய தளமாக இத்திட்டத்தை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனுபவமிக்க தலைவர்கள் மற்றும் அரசியல் மூத்தோர் இடம்பெறும் தேசிய பேரவையின் பங்கும் நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் முக்கியமானதாக இருப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். அவர்களின் ஆலோசனைகள் மற்றும் அனுபவங்கள், தேசிய முன்னேற்றக் கொள்கைகளை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.






