என் தமிழ்

மலேசிய போட்டி ஆணையத்தின் அதிகாரத்தை வலுப்படுத்தும் சட்டத் திருத்தங்களுக்கு மக்களவை ஒப்புதல்

கோலாலம்பூர், 06 ஜூலை 2026 : மலேசிய போட்டி ஆணையத்தின் அமலாக்கம் மற்றும் விசாரணை அதிகாரங்களை வலுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட போட்டிச் சட்டம் மற்றும் மலேசிய போட்டி ஆணையச் சட்டத் திருத்த மசோதாக்களுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.

உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமது அலி கூறுகையில், இந்தச் சட்டத் திருத்தங்கள் நாட்டில் ஆரோக்கியமான போட்டிச் சூழலை உருவாக்குவதுடன், சந்தை முறைகேடுகள் மற்றும் போட்டிக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் திறம்படக் கட்டுப்படுத்த உதவும் என்றார்.

திருத்தங்களின் கீழ், மொத்தம் 34 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 29 பிரிவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், ஐந்து புதிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், சந்தை ஆய்வுகளுக்குத் தேவையான தகவல்களை வழங்க ஒத்துழைக்காத நிறுவனங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் புதிய சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், நிறுவனங்களின் கூட்டமைப்புகள் கார்ட்டெல் நடவடிக்கைகள் அல்லது சந்தை கையாளுதலுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, அவற்றின் வரையறையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தீர்ப்புகள் போட்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தால் ரத்து செய்யப்பட்டால், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் அதிகாரமும் மலேசிய போட்டி ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Scroll to Top