என் தமிழ்

வெளிநாட்டு தொழிலாளர் மேலாண்மை : ஒருங்கிணைந்த சேவை மையத்தை பொறுப்பேற்கும் மனிதவள அமைச்சு

கோலாலம்பூர், 06 ஜூலை 2026 : வெளிநாட்டு தொழிலாளர் மேலாண்மைக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தின் (ஒன் ஸ்டாப் சென்டர்) நிர்வாகப் பொறுப்பை மனிதவள அமைச்சு ஏற்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 1-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதன் மூலம், வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீட்டு விண்ணப்பங்கள் தொழில்துறையின் தேவைகளை பாதிக்காமல் விரைவாகவும் திறம்படவும் செயல்படுத்தப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக, வெளிநாட்டு தொழிலாளர் மையப்படுத்தப்பட்ட மேலாண்மை அமைப்பின் கீழ் செயல்படும் மின்னணு ஒதுக்கீட்டு வசதி ஒரே டிஜிட்டல் தளமாக பயன்படுத்தப்படும். இந்த முறைமையின் மூலம் இணையவழி விண்ணப்பம், நேர்காணல் அட்டவணை மற்றும் விண்ணப்ப செயல்முறைகள் மேலும் ஒழுங்குபடுத்தப்படும். இதனால் சேவை மையங்களில் ஏற்படும் நெரிசலும் குறையும்.

மேலும், இதுவரை நிலுவையில் உள்ள சுமார் 22 ஆயிரத்து 476 கைமுறை விண்ணப்பங்களும் புதிய மின்னணு அமைப்பின் மூலம் பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்தும் முன், உள்ளூர் குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் “என் எதிர்கால வேலைவாய்ப்புகள்” இணையத் தளத்தில் வேலைவாய்ப்புகள் முதலில் அறிவிக்கப்பட வேண்டும் என்றும், அதன்பிறகே வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சு விளக்கியுள்ளது.

அதேவேளை, வெளிநாட்டு தொழிலாளர் மேலாண்மையை மேலும் வலுப்படுத்த மனிதவள அமைச்சின் கீழ் புதிய வெளிநாட்டு தொழிலாளர் மேலாண்மைப் பிரிவு அமைக்கப்படவுள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான இடைநிலை மையம் அமைப்பது தொடர்பான பரிந்துரையும், தொழிலாளர்களை அனுப்பும் நாடுகளுடன் கலந்தாலோசித்து, சர்வதேச சிறந்த நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

Scroll to Top