என் தமிழ்

தயாரிப்பாளராக புதிய பயணம் : முதல் படத்தை அறிவித்த பிரதீப் ரங்கநாதன்

சென்னை, 06 ஜூலை 2026 : இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வரும் பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராக புதிய இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார். அவர் தொடங்கியுள்ள ‘பிஆர் ஷோ’ தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இந்தப் புதிய திரைப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இதில் மமிதா பைஜூ, ஸ்வாசிகா, சிவாஜி சொண்டினேனி, அனாமிகா மஹி மற்றும் லிசி ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் அறிவிப்புடன் சிறப்பு அறிமுகக் காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது. புதிய கதை அம்சம் மற்றும் வித்தியாசமான படைப்பாக உருவாகும் எனக் கூறப்படும் இந்தத் திரைப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர், நடிகர் ஆகிய அடையாளங்களைத் தொடர்ந்து தயாரிப்பாளராகவும் தனது பயணத்தைத் தொடங்கியுள்ள பிரதீப் ரங்கநாதனுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். படத்தின் தலைப்பு மற்றும் இதர விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top