என் தமிழ்

தொழில்முனைவோர், கூட்டுறவுகளுக்கு 252.7 கோடி ரிங்கிட்டுக்கும் அதிக கடன் ஒப்புதல்

06 ஜூலை 2026 : தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சின் கீழ் செயல்படும் நிதி முகமைகள் இதுவரை 252 கோடியே 70 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான கடன்களை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

தேசிய கூட்டுறவு தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய அவர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் தங்களது தொழிலை விரிவுபடுத்துவதற்கு தேவையான நிதி ஆதரவை அரசு தொடர்ந்து வழங்கி வருவதாகக் கூறினார்.

அமைச்சின் கீழ் செயல்படும் பல்வேறு நிதி நிறுவனங்கள் மூலம் தொழில்முனைவோருக்கு எளிதான கடன் வசதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தொழில்களை விரிவுபடுத்துவதற்கான அரசின் ஆதரவு மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, கூட்டுறவுச் சங்கங்கள் அரசின் நிதியுதவித் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்தி, தங்களது வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ஸ்டீவன் சிம் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவுத் துறையின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Scroll to Top