கோலாலம்பூர், 06 ஜூலை 2026 : மானிய விலையில் வழங்கப்படும் ஒரு கிலோகிராம் சமையல் எண்ணெய் பொட்டலங்களின் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு கண்காணிப்பு அமைப்பில், கடந்த ஜூலை 3ஆம் தேதி வரை 52 லட்சத்து 61 ஆயிரம் மலேசியர்கள் பதிவு செய்துள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஃபூஸியா சாலே தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மின்னணு செயலி, தற்போது மாதந்தோறும் சராசரியாக 1 கோடியே 40 லட்சம் பரிவர்த்தனைகளை பதிவு செய்து வருவதாக அவர் கூறினார். இதன் மூலம் மானிய சமையல் எண்ணெய் விநியோகத்தை கண்காணிப்பது மேலும் வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, சமையல் எண்ணெய் கிடைக்காதது தொடர்பான பொதுமக்களின் புகார்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. ஜொகூரில் மட்டும் இந்த மின்னணு செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, மானிய சமையல் எண்ணெய் விற்பனையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, திறன்பேசி இல்லாத முதியவர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் வசதிக்காக கையேடு முறையிலான கொள்முதல் தொடரும் என்றும், சில்லறை விற்பனை நிலையங்களில் அவர்களுக்கு தேவையான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் டத்தோ டாக்டர் ஃபூஸியா சாலே உறுதியளித்தார்.






