என் தமிழ்

பனைத் தோட்டம்–கால்நடை ஒருங்கிணைப்பு : சிறு விவசாயிக்கு ரூ.1.26 லட்சம் வருமானம்

06 ஜூலை 2026 : பனை எண்ணெய் சிறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் மலேசிய அரசு செயல்படுத்தி வரும் பனைத் தோட்டம்–கால்நடை ஒருங்கிணைப்பு (ITe) திட்டம் குறிப்பிடத்தக்க பலனை அளித்து வருகிறது. ஜோகூரின் பத்து பஹாட் பகுதியில், அரசு வழங்கிய 15,000 ரிங்கிட் நிதியுதவியுடன் வாத்து வளர்ப்பைத் தொடங்கிய சிறு விவசாயி ஒருவர், மூன்று ஆண்டுகளுக்குள் 1 லட்சத்து 26 ஆயிரம் ரிங்கிட் மொத்த வருமானம் ஈட்டியுள்ளதாக மலேசிய பனை எண்ணெய் வாரியம் (MPOB) தெரிவித்துள்ளது.

பனைத் தோட்டத்தில் 360 முட்டையிடும் வாத்துகளை வளர்த்து வரும் அந்த விவசாயி, நாளொன்றுக்கு சுமார் 240 வாத்து முட்டைகளை உற்பத்தி செய்து வருகிறார். 2026 மே மாதம் வரை மொத்தம் 94,860 முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், புதிய முட்டைகளுடன் உப்பு முட்டைகளையும் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டி வருகிறார். மாதந்தோறும் 2,000 முதல் 4,000 ரிங்கிட் வரை கூடுதல் வருமானமும் கிடைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டங்கள் மற்றும் பொருட்கள் அமைச்சின் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் நோராய்னி அகமட் கூறுகையில், இந்தத் திட்டம் சிறு விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, ஒரே பயிரை மட்டுமே சார்ந்து இருக்காமல் கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது என்றார். மேலும், கால்நடைகளின் கழிவுகள் இயற்கை உரமாக பயன்படுத்தப்படுவதால் இரசாயன உரங்களின் பயன்பாடும் குறைந்து, நிலத்தின் வளமும் அதிகரிப்பதாக அவர் தெரிவித்தார்.

அரசின் பனைத் தோட்டம்–கால்நடை ஒருங்கிணைப்பு (ITe) திட்டத்தின் மூலம் மேலும் பல சிறு விவசாயிகள் பயனடைந்து, அவர்களின் பொருளாதார நிலை வலுப்பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Scroll to Top