என் தமிழ்

TURAP திட்டம் : அமைச்சரவை ஒப்புதலை ஒத்திவைக்க KLSICCI தலைவர் வலியுறுத்தல்

கோலாலம்பூர், 29 ஜூன் 2026 : வெளிநாட்டு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள யுனிவர்சல் ரிக்ரூட்மென்ட் அட்வான்ஸ்டு பிளாட்ஃபார்ம் (TURAP) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் நடவடிக்கையை, அதன் பொருளாதார மற்றும் செயல்பாட்டு தாக்கங்கள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தொழில்துறையினருடன் விரிவான ஆலோசனை நடத்தப்படும் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (KLSICCI) வலியுறுத்தியுள்ளது.

KLSICCI தலைவர் வி.கே.கே. ராஜசேகரன் தியாகராஜன் கூறுகையில், இந்த புதிய முறை சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (SME) கூடுதல் செலவு, நிர்வாகச் சுமை மற்றும் இணக்கப்பாட்டு (Compliance) சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக உற்பத்தி, கட்டுமானம், தோட்டம், சில்லறை வணிகம் மற்றும் சேவைத் துறைகளில் செயல்படும் இந்திய வணிகர்கள் வெளிநாட்டு தொழிலாளர்களையே பெரிதும் சார்ந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், வெளிநாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பில் காணப்படும் நிர்வாகக் குறைபாடுகள் சில குறிப்பிட்ட நாடுகளுடன் தொடர்புடைய ஆட்சேர்ப்பு வழித்தடங்களில் மட்டுமே இருப்பதாகக் கூறிய அவர், அதற்காக அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் புதிய முறையை கட்டாயப்படுத்துவது சரியான தீர்வாக இருக்காது என்றார். பிரச்சினை உள்ள வழித்தடங்களில் மட்டுமே கண்காணிப்பு முறையை வலுப்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

TURAP அமலாக்கத்தால் ஏற்படக்கூடிய பயன்பாட்டுக் கட்டணம், சந்தா கட்டணம், பணியாளர் பயிற்சி, இணக்கப்பாட்டு செலவுகள் மற்றும் தற்போதுள்ள முறையிலிருந்து மாறுவதற்கான செலவுகள் குறித்து எந்தவித சுயாதீன பொருளாதார தாக்க ஆய்வும் வெளியிடப்படவில்லை என்றும் ராஜசேகரன் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே மூலப்பொருள் விலை உயர்வு, தொழிலாளர் செலவு அதிகரிப்பு மற்றும் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

தற்போது வெளிநாட்டு தொழிலாளர் மேலாண்மைக்காக FWCMS உள்ளிட்ட பல்வேறு மின்னணு தளங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், 2028-ஆம் ஆண்டில் NIISe முறையும் அறிமுகமாகவுள்ளது. இந்நிலையில் TURAP-ஐ மேலும் ஒரு தனி தளமாக அறிமுகப்படுத்துவது செயல்முறை குழப்பம், பணிகள் இருமுறை நடைபெறுதல் மற்றும் இணக்கப்பாட்டு சிக்கல்களை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, TURAP திட்டம் குறித்து முழுமையான பொருளாதார மற்றும் செயல்பாட்டு தாக்க மதிப்பீட்டை வெளியிட்டு, தொழில்துறையினருடன் திறந்த ஆலோசனை நடத்தி, அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்ட பிறகே அமைச்சரவை ஒப்புதல் வழங்க வேண்டும் என்று KLSICCI வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரம் அமைச்சரவையில் பரிசீலிக்கப்படுவதற்கு முன்பு மனிதவள அமைச்சரும் வணிக சமூக பிரதிநிதிகளும் நேரடியாக சந்தித்து கலந்துரையாட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Scroll to Top