சென்னை, 29 ஜூன் 2026 : கவியரசு கண்ணதாசனின் நூற்றாண்டு தொடக்க விழா, அவரது குடும்பத்தினரின் ஏற்பாட்டில் சென்னை வாணி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு நூற்றாண்டு விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், திரைப்பட இயக்குநர் எஸ். பி. முத்துராமன், பின்னணிப் பாடகி பி. சுசீலா, நடிகர் ஒய். ஜி. மகேந்திரன், கராத்தே தியாகராஜன், மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்று கவியரசு கண்ணதாசனின் இலக்கிய மற்றும் திரைப்படப் பங்களிப்புகளை நினைவுகூர்ந்தனர்.
மேலும், லக்ஷ்மண் சுருதி இசைக் குழுவினர் கண்ணதாசனின் புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களை இசையமைத்து வழங்கினர். அரங்கம் முழுவதும் திரண்டிருந்த ரசிகர்கள், கவியரசின் பாடல்களை ரசித்து மகிழ்ந்ததுடன், அவரது நூற்றாண்டு விழா உணர்வுபூர்வமான முறையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு, தமிழ் இலக்கியம் மற்றும் திரைப்பட இசையில் கண்ணதாசன் விட்டுச் சென்ற அழியாத தடத்தை மீண்டும் நினைவூட்டும் வகையில் அமைந்தது.







