சிலாங்கூர், 29 ஜூன் 2026 : 42-வது அகோங் கோப்பை ரக்பி போட்டியின் இறுதிப்போட்டியில், ஜோகூர் அணி அபாரமான மீள்வரவை வெளிப்படுத்தி, தெரெங்கானுவை 33-26 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. சிலாங்கூரின் ஷா ஆலமில் உள்ள யுஐடிஎம் (UiTM) மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்கத்தில் தெரெங்கானு அணி 19-0 என்ற முன்னிலையைப் பெற்றிருந்தது.
எனினும், அதன்பின் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய ஜோகூர், முதல் பாதி முடிவில் புள்ளி வித்தியாசத்தை 19-17 ஆகக் குறைத்தது. இரண்டாவது பாதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஜோகூர், தொடர்ச்சியாக புள்ளிகளைச் சேர்த்து 33-26 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பியை கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளாக இறுதிப்போட்டியில் சந்தித்த ஏமாற்றங்களுக்கு ஜோகூர் முற்றுப்புள்ளி வைத்ததுடன், 2013 மற்றும் 2017-க்குப் பிறகு மூன்றாவது முறையாக அகோங் கோப்பை சாம்பியன் பட்டத்தைத் தனதாக்கியது. போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜோகூரின் அகாஷா டேனியல் இர்வான், ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.






