25 ஜூன் 2026 : அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சகத்தின் (MOSTI) பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் நாகுலேந்திரன் கங்காயத்கரசு தலைமையிலான மலேசியக் குழு, லாவோஸ் மக்கள் ஜனநாயகக் குடியரசின் வியன்டியானில் நடைபெற்ற 15-ஆவது ஆசியான்–ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக் குழு (AJCCST-15) கூட்டத்தில் பங்கேற்றது.
22-ஆவது ஆசியான் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்கள் கூட்டம் (AMMSTI-22), 89-ஆவது ஆசியான் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் குழு (COSTI-89) மற்றும் அதனுடன் தொடர்புடைய கூட்டங்களுடன் இணைந்து நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஆசியான் மற்றும் ஜப்பான் இடையிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க (STI) ஒத்துழைப்பு திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், ஆசியான் சமூக தொலைநோக்குப் பார்வை 2045 மற்றும் ஆசியான் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க செயல் திட்டம் (APASTI) 2026–2035 ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள புதிய முன்னுரிமைகள் குறித்தும் உறுப்புநாடுகள் விரிவாக விவாதித்தன.
இந்தக் கூட்டத்தில் ஆராய்ச்சி ஒத்துழைப்பு, திறமையாளர் பரிமாற்றம், டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு (AI), உயர் செயல்திறன் கணினி (HPC) மற்றும் பசுமை மாற்ற முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
அதேவேளை, ASEAN Innovation Virtual Organisation (IVO) திட்டத்தின் வளர்ச்சியை மலேசியா வரவேற்றதுடன், MIMOS தலைமையில் செயல்படுத்தப்படும் மலேசியத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முயற்சி, பிராந்திய அளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், புதுமை சார்ந்த ஆராய்ச்சிகளுக்கும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








