கோலாலம்பூர், 25 ஜூன் 2026 : AVLT புரொடக்ஷன் நிறுவனம், வரவிருக்கும் தமிழ் குற்றத் திரில்லர் திரைப்படமான ‘இரும்புத் தோட்டம்’ வெளியீட்டை முன்னிட்டு, நாடு தழுவிய ‘இரும்புத் தோட்டம் மைக்ரோஃபிலிம் போட்டி’யை அறிவித்துள்ளது.
’90 விநாடிகள்… ஒரு குற்றம்… முடிவில்லா சாத்தியங்கள்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்தப் போட்டி, மலேசியா முழுவதும் உள்ள இளம் திரைப்பட இயக்குநர்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் கதை சொல்லும் திறன் கொண்டவர்களுக்கு தங்களது சொந்த 90 விநாடி குற்றத் திரில்லர் படைப்புகளை உருவாக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
போட்டியாளர்கள், திரைப்படத்தின் கதையை மீண்டும் உருவாக்காமல், ‘இரும்புத் தோட்டம்’ உலகத்தை விரிவுபடுத்தும் வகையில் புதிய குற்ற மர்மக் கதைகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு படைப்பும் ‘Irumbuth Thottam: ______’ என்ற தலைப்பு வடிவத்துடன் தொடங்க வேண்டும் என்பதும் நிபந்தனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்பது முற்றிலும் இலவசம். காணொளிகளை செங்குத்து அல்லது கிடைமட்ட வடிவத்தில் தயாரிக்கலாம். இருப்பினும், சமூக ஊடகங்களில் பகிர்வதற்காக செங்குத்து வடிவிலான காணொளிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. அனைத்து படைப்புகளும் குற்றத் திரில்லர் வகையைச் சேர்ந்ததாகவும், அதிகபட்சம் 90 விநாடிகளுக்குள் நிறைவடைய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்பாட்டாளர்கள் வழங்கும் ‘இரும்புத் தோட்டம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் பகுதியை ஒவ்வொரு படைப்பின் தொடக்கத்திலும் இணைப்பது கட்டாயமாகும்.
போட்டிக்கான படைப்புகளை ஜூலை 14, 2026, இரவு 11.59 மணி வரை சமர்ப்பிக்கலாம். பங்கேற்பாளர்கள் தங்களது படைப்புகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றி, ‘இரும்புத் தோட்டம்’ அதிகாரப்பூர்வ பக்கங்களைக் குறியிட்டு, போட்டிக்கான வழிகாட்டுதலின்படி சமர்ப்பிக்க வேண்டும்.
மலேசிய படைப்புலகைச் சேர்ந்த நடுவர்களைக் கொண்ட குழு, கதை சொல்லும் தனித்துவம், காட்சியமைப்பு, ஒலித் தரம், தாக்கம் மற்றும் பார்வையாளர்களின் ஈடுபாடு ஆகிய அடிப்படைகளில் படைப்புகளை மதிப்பீடு செய்யவுள்ளது.
சிறந்த மூன்று வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளதுடன், இறுதிச் சுற்றுக்கு தேர்வாகும் முதல் பத்து பேருக்கு ‘இரும்புத் தோட்டம்’ திரைப்படத்தின் முதல் காட்சி நிகழ்வில் பங்கேற்கும் சிறப்பு அழைப்பும், ஆச்சரிய பரிசுகளும் வழங்கப்படும் என ஏ.வி.எல்.டி. புரொடக்ஷன் தெரிவித்துள்ளது. ‘இரும்புத் தோட்டம்’ திரைப்படம் வரும் ஜூலை 23 முதல் நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.







