09 ஆகஸ்ட் 2026 : அமெரிக்கா தனது நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டு வரும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் புதிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
ஈரானை இனிமேல் அச்சுறுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளக் கூடாது என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.மேலும், ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், பிராந்தியத்தில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும், ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை நீக்க வேண்டும், மேலும் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும் என்றும் அந்த நாடு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்கா இதுவரை உடனடி பதில் எதையும் வெளியிடவில்லை. இதற்கிடையே, ஓமன் முன்னிலையில் அமெரிக்கா–ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஹார்முஸ் நீரிணை சர்வதேச எண்ணெய் மற்றும் எரிசக்தி கப்பல் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிப் பாதையாக இருப்பதால், அதன் நிலை குறித்த ஈரானின் அறிவிப்பு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.






