புத்ராஜெயா, 23 ஜூன் 2026 : மலேசியா–அமெரிக்கா இடையிலான பரஸ்பர சுங்க வரி (ART) தொடர்பான ஒப்பந்தம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக இரு தரப்பினரும் பல்வேறு கட்டங்களில் ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும், மலேசியாவின் பொருளாதார நலன், வர்த்தக நலன்கள் மற்றும் முதலீட்டு சூழலை பாதுகாக்கும் வகையில் அரசின் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களும் இன்னும் இறுதி செய்யப்படாததால், அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று அரசு விளக்கம் அளித்துள்ளது. எனினும், இருதரப்பு வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இரு நாடுகளும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையுடன் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
அமெரிக்கா, மலேசியாவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளர்களில் ஒன்றாக இருப்பதால், இந்த ஒப்பந்தம் ஏற்றுமதி, இறக்குமதி, முதலீடு மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், தேசிய நலனுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒப்பந்தத்தின் ஒவ்வொரு அம்சமும் கவனமாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அரசு வலியுறுத்தியுள்ளது.
பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்து இரு தரப்பும் இறுதி உடன்பாட்டை எட்டிய பின்னரே, ஒப்பந்தம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சம்பந்தப்பட்ட தரப்புகள் தெரிவித்துள்ளன.






