என் தமிழ்

சட்டசபை நிறைவு நாள் : நடந்தது என்ன ?

சென்னை, 23 ஜூன் 2026 : சட்டசபை கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று, நேற்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய முக்கிய கேள்விகளுக்கு முதலமைச்சர் திரு. விஜய் பதிலளித்தார். இருப்பினும், அந்தப் பதில்கள் அரசு நிர்வாகம் குறித்த விளக்கங்களாக இருந்ததா அல்லது அரசியல் மேடைப் பேச்சாக இருந்ததா என்பது அவையைக் கவனித்தவர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.

உரையின்போது குட்டிக் கதைகள், நகைச்சுவை, நையாண்டி, கிண்டல் என பல்வேறு பாணிகளை கலந்து பேசிய முதலமைச்சர், அரசின் செயல்பாடுகளை விளக்குவதை விட தனது பேச்சுத் திறனை வெளிப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தியதாக தோன்றியது. சட்டசபையை விட, ஒரு திரைப்படத்தின் உச்சக்கட்ட காட்சியைப் பார்ப்பது போன்ற உணர்வையே அந்த உரை ஏற்படுத்தியதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, பாலியல் சர்ச்சைகள், தொடர் மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக, அந்த விவகாரங்கள் அனைத்திற்கும் எதிர்க்கட்சியான தி.மு.க.வே காரணம் என்ற தொனியில் பதிலளித்தது அவையில் கவனத்தை ஈர்த்தது.

நேற்று எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் ஒவ்வொன்றாக விளக்கமளிக்காமல், தி.மு.க. அரசின் மீதான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் அடுக்கடுக்காக முன்வைத்த பின்னர் முதலமைச்சர் தனது உரையை நிறைவு செய்தார்.

சட்டசபை நிறைவு நாளில் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த தெளிவான விளக்கங்களை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு, பதில்களை விட நையாண்டிகளும், விவாதங்களை விட வசனங்களும், விளக்கங்களை விட அரசியல் விமர்சனங்களுமே அதிகம் இடம்பெற்றதாகவே இன்றைய அவை நிகழ்வுகள் அமைந்தன.

Scroll to Top