சென்னை, 15 ஜூன் 2026 : நடிகர் யோகி பாபு நடித்துள்ள ‘கெணத்த காணோம்’ திரைப்படம், தனது திரையரங்கு ஓட்டத்தைத் தொடர்ந்து வரும் ஜூன் 16 முதல் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கிய கடைசி திரைப்படமாக அமைந்துள்ள ‘கெணத்த காணோம்’, நகைச்சுவை, சமூகச் சாடல் மற்றும் கிராமிய பின்னணியைக் கொண்ட படைப்பாகும்.
இப்படத்தின் கதை, கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமத்தை மையமாகக் கொண்டது. தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண கிணறு தோண்டும் கிராம மக்கள், எதிர்பாராத விதமாக கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமையான டைனோசர் புதைபடிவங்களை கண்டுபிடிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களே படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது.
படத்தில் யோகி பாபுவுடன் லவ்லின் சந்திரசேகர், ஜார்ஜ் மரியான், ரைச்சல் ரெபெக்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை நிவாஸ் கே. பிரசன்னா அமைத்துள்ளார்.
கடந்த மார்ச் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம், தண்ணீர் பற்றாக்குறை, நிர்வாகம் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.






