சிலாங்கூர், 28 அக்டோபர் 2026 : மலேசியாவில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள 22,000 வசதி குறைந்த இந்தியக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், பத்து குகையில் நடைபெற்ற தீபாவளி 2026 உணவுப் பொருள் உதவி வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மனிதவள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, பண்டிகைக் காலத்தில் குடும்பங்களின் செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.



தீபாவளியின் மகிழ்ச்சி வசதி குறைந்த குடும்பங்களையும் சென்றடைய வேண்டும் என்று குறிப்பிட்ட அமைச்சர், ஒவ்வொரு உதவியும் ஒரு குடும்பத்திற்குப் பெரும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் என்றார்.
இந்த உதவிகள் நாடு முழுவதும் உள்ள பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதிசெய்யும் மனிதவள அமைச்சக அதிகாரிகள், தொடர்புடைய அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். 22,000 குடும்பங்களும் மகிழ்ச்சியுடனும் நன்றியுணர்வுடனும் தீபாவளியைக் கொண்டாட இந்த முயற்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.







