பிரிக்பீல்ட்ஸ், 28 அக்டோபர் 2026 : கோலாலம்பூரில் உள்ள பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவுக்குச் சென்ற தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா. தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன், அங்குள்ள வணிகர்களைச் சந்தித்து அவர்களின் வியாபார நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
தீபாவளியை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டுள்ள லிட்டில் இந்தியா வணிக மையங்களைப் பார்வையிட்ட அவர், கடைகளின் தற்போதைய விற்பனை நிலவரம் மற்றும் வணிகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கலந்துரையாடினார்.
அப்போது, தீபாவளி விற்பனைக்கான இறுதி ஒரு வாரத்திலாவது கடைகளுக்கு வெளியே பொருட்களை வைத்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டால் தங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என வணிகர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் பண்டிகைக் கால விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களைக் கவரவும் முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா, இந்தியர்களின் பாரம்பரியம், கலை மற்றும் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் முக்கிய வணிக மையமாகத் தொடர்ந்து விளங்கி வருவதாகக் குறிப்பிட்ட சரவணன், இவ்விடம் தனது 16ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதாகவும் தெரிவித்தார்.
இருள் நீங்கி ஒளி பெருகும் தீபாவளித் திருநாளில் வணிகர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் பண்டிகையைக் கொண்டாடும் சூழலை உருவாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.







