என் தமிழ்

இந்தியப் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம்

13 ஜூன் 2026 : இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வரலாற்றில் நீண்டகாலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ள நிலையில், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் வளர்ச்சி, வளம் மற்றும் உலக அரங்கில் அதன் நிலையை உயர்த்துவதில் மோடி வழங்கிய தலைமைத்துவத்தையும் அர்ப்பணிப்பான பொதுச் சேவையையும் அன்வார் பாராட்டியுள்ளார்.

“இந்தியாவின் நீண்டகாலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக உருவெடுத்துள்ள இந்த வரலாற்றுச் சாதனைக்காக பிரதமர் மோடிக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள். இந்தியாவின் முன்னேற்றம், செழிப்பு மற்றும் உலகளாவிய செல்வாக்கை உயர்த்துவதில் அவர் ஆற்றிய சேவை குறிப்பிடத்தக்கது,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், மலேசியா மற்றும் இந்தியா இடையிலான நீண்டகால நட்புறவை மலேசியா பெரிதும் மதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாக கூறினார்.

அத்துடன், பிரதமர் மோடிக்கு தொடர்ந்து வெற்றிகளும், இந்திய மக்களுக்கு அமைதி, முன்னேற்றம் மற்றும் வளமும் கிடைக்க வாழ்த்துவதாக அன்வார் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.

மலேசியா மற்றும் இந்தியா இடையே வர்த்தகம், முதலீடு, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் மக்கள்-மக்கள் தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top