செரம்பான், 13 ஜூன் 2026 : நெகிரி செம்பிலான் மாநிலத்தின் வளர்ச்சியும் நிலையான எதிர்காலமும் தொடர வேண்டுமெனில், வரவிருக்கும் 16-வது மாநிலத் தேர்தலில் (PRN) பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணிக்கு மீண்டும் ஆட்சியமைக்கும் ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என்று பிரதமரும் பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார்.
நெகிரி செம்பிலான் PH தேர்தல் இயந்திரத்தின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய அவர், மாநிலத்தின் முன்னேற்றப் பயணம் தொடர்வதற்கும், மக்களின் நலன் பாதுகாக்கப்படுவதற்கும் தற்போதைய மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமினுதீன் ஹரூன் மீண்டும் அந்தப் பதவியில் தொடர்வதற்கான முழுமையான ஆதரவை மக்கள் வழங்க வேண்டும் என்றார்.
“நெகிரி செம்பிலான் மக்களின் எதிர்காலம் மேலும் பாதுகாப்பாகவும் வளமாகவும் அமைய, PH அரசாங்கத்திற்கு வலுவான ஆணை வழங்கப்பட வேண்டும். அந்த ஆணையின் மூலம் டத்தோ ஸ்ரீ அமினுதீன் ஹரூன் மீண்டும் மந்திரி புசாராக நியமிக்கப்படுவார்,” என்று அவர் தெரிவித்தார்.



மேலும், மாநிலத்தின் எதிர்காலம் என்பது சாதாரண மக்களின் எதிர்காலமாகும் என்றும், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் நலனையும் உறுதிப்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வில் பக்காத்தான் ஹராப்பான் துணைத் தலைவர் அந்தோனி லோக், PH பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில், பிகேஆர் தகவல் தலைவர் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் உள்ளிட்ட கூட்டணியின் மூத்த தலைவர்களும் கலந்துகொண்டனர்.
வரவிருக்கும் மாநிலத் தேர்தலை முன்னிட்டு PH தேர்தல் இயந்திரம் அதிகாரப்பூர்வமாக இயக்கிவிடப்பட்டுள்ள நிலையில், மாநில மக்களின் ஆதரவை மீண்டும் பெறும் நோக்கில் கூட்டணி தனது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.






