கோலாலம்பூர், 28 ஜூலை 2026 : மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் பரமேஸ்வரி மனோகரன், தென்னிந்திய நட்சத்திரம் விருதுகள் 2026 (South Indian Nakshatram Awards 2026) விழாவில் ‘உலகின் சிறந்த தொழில்முனைவோர்’ (Global Entrepreneur of the Year) விருதைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
மலேசியாவின் முதல் இந்தியப் பெண் பிரான்சைஸ் தொழில் அதிபராக திகழும் அவர், Sunshine Educational Group (M) Sdn. Bhd. மூலம் ஆரம்பக் குழந்தைகள் கல்வித் துறையில் ஆற்றிவரும் பங்களிப்பிற்காக இந்த சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
இந்தியாவில் SunQids India Private Limited நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி, தனது கல்விச் சேவையை இந்தியாவிற்கும் விரிவுபடுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் (UAE) நிறுவனத்தின் சேவையை விரிவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மேலும், மலையாள திரைப்பட நடிகை ஸ்வாசிகா விஜயுடன் இணைந்து இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்றது தனக்கு பெருமையளிப்பதாகவும் பரமேஸ்வரி மனோகரன் குறிப்பிட்டார். இந்த விருதை தனது கணவர் டாக்டர் ஆர்.வி. ஷ்யாம் பிரசாத், குடும்பத்தினர், நிறுவன ஊழியர்கள், பிரான்சைஸ் பங்குதாரர்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் தனது பயணத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்தார்.
மலேசியாவில் உருவான கல்வி நிறுவனத்தை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் பயணம் தொடரும் என்றும், குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்குவதோடு, புதிய தலைமுறை தொழில்முனைவோர்களையும் உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.






