என் தமிழ்

JPJ மத்திய மண்டல APC 2025 விழா : 215 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கௌரவிப்பு

ஷா ஆலம், 13 ஜூன் 2026 : சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) மத்திய மண்டல அளவிலான APC 2025 (Anugerah Perkhidmatan Cemerlang) மற்றும் ‘Jasamu Dikenang’ (Pesara) 2026 விழாவை இன்று ஷா ஆலத்தில் சிறப்பாக நடத்தியது. இந்த நிகழ்வில், 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த சேவை விருது (APC) பெற்ற 179 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும், ஓய்வு பெற்ற 36 பணியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவை சாலைப் போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி பின் ராம்லி தொடக்கி வைத்தார். இந்த அங்கீகாரம், மக்களுக்கு தரமான சேவையை வழங்குவதில் JPJ ஊழியர்கள் வெளிப்படுத்தி வரும் அர்ப்பணிப்பு, நேர்மை, தொழில்முறைத் திறன் மற்றும் சிறப்பான சேவைக்கான பாராட்டாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அவர், சிறந்த சேவை விருது பெறுபவர்கள் மற்றும் ஓய்வு பெறும் அதிகாரிகள் அனைவரும் துறையின் வளர்ச்சிக்கும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையின் தர உயர்வுக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டில், சபா, சரவாக், கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களை உள்ளடக்கிய வகையில் நாடு முழுவதும் 622 APC விருது பெறுபவர்களும், 143 ஓய்வுபெற்ற அதிகாரிகளும் கௌரவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விழாவில் சாலைப் போக்குவரத்துத் துறையின் துணை தலைமை இயக்குநர் (திட்டம் மற்றும் செயல்பாடுகள்) டத்தோ ஜஸ்மானி பின் ஷஃபாவி, துணை தலைமை இயக்குநர் (மேலாண்மை) ஹாஜி ஜமாருஸ்லாம் பின் அப்துல்லா, அமலாக்கப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ முகமது கிஃப்லி பின் மா ஹாசன், சிலாங்கூர் மாநில JPJ துணை இயக்குநர் டத்தோ அகமட் கமருஞ்சமான் பின் மெஹாட், கோலாலம்பூர் கூட்டாட்சி பிரதேச JPJ இயக்குநர் ஹமிடி பின் ஆடம், JPJ அகாடமி இயக்குநர் டாக்டர் அஸ்மி பின் அவாங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த விழா, சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களின் சேவையைப் பாராட்டுவதோடு, ஓய்வுபெறும் அதிகாரிகளின் அர்ப்பணிப்பையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்றது.

Scroll to Top