கோலாலம்பூர், 12 ஜூன் 2026 : மக்கள் ஆதரவைப் பெறுவதற்கான உண்மையான அளவுகோல் தேர்தல்தான் என்றும், வெறும் ஊடக அறிக்கைகள் அல்லது சமூக ஊடகச் செயல்பாடுகள் மட்டுமே ஒரு அரசியல் கட்சியின் வலிமையை நிரூபிக்க முடியாது என்றும் PAS ஆதரவாளர்கள் பேரவையின் (DHPP) மத்தியத் தலைவர் குமரேசன் பி.கே. தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் கூறியதாவது, ஒரு கட்சியின் உண்மையான பலம் அதன் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு, வலுவான தேர்தல் இயந்திரம், ஒற்றுமையான தலைமைத்துவம் மற்றும் அடிமட்ட மக்களுடனான தொடர்ச்சியான தொடர்பு ஆகியவற்றில்தான் வெளிப்படுகிறது என்றார்.
“மக்களின் நம்பிக்கையைப் பெற விரும்பும் எந்த அரசியல் கட்சியும் கடின உழைப்பு, சமூக சேவை மற்றும் நிலையான களப்பணியின் மூலம் தன்னை நிரூபிக்க வேண்டும். வெறும் அரசியல் பேச்சுகளாலும் அறிக்கைகளாலும் மக்கள் ஆதரவு உருவாகாது,” என அவர் குறிப்பிட்டார்.
சில தரப்புகள் தங்களிடம் பெரிய அரசியல் வலிமை இருப்பதாக காட்டிக் கொள்ள பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், ஆனால் ஒரு கட்சியின் பலம் மைக்ரோஃபோனிலோ சமூக ஊடகங்களிலோ அளவிடப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.
“தேர்தல் காலத்தில் மக்களை அணிதிரட்டும் திறன், திட்டமிட்ட செயற்பாடு மற்றும் சொந்த பலத்தில் போட்டியிடும் ஆற்றல்தான் உண்மையான அரசியல் வலிமையை வெளிப்படுத்துகிறது,” என்றார்.
இன்றைய மக்கள் அரசியல் ரீதியாக முதிர்ச்சியடைந்துள்ளதுடன், உண்மையாக உழைக்கும் கட்சிகளையும் வெறும் பிரசாரத்தை நம்பும் கட்சிகளையும் எளிதில் வேறுபடுத்தி அறியக் கூடியவர்களாக உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், PAS வழங்கும் ஒத்துழைப்பு வாய்ப்பை நேர்மையுடனும் பொறுப்புணர்வுடனும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பொதுநல இலக்குகளை முன்னிறுத்த வேண்டிய நேரத்தில், தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காக நிபந்தனைகள் விதிப்பதோ அல்லது “விலை பேசும்” அணுகுமுறையை கடைப்பிடிப்பதோ பொருத்தமல்ல என்றும் தெரிவித்தார்.
“ஒத்துழைப்பில் நேர்மையும் அர்ப்பணிப்பும் இருந்தால் அது மக்களால் மதிக்கப்படும். களத்தில் தங்களது திறனை நிரூபிக்காமல் அங்கீகாரம் கோரும் அணுகுமுறை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறாது,” என்றார்.
இறுதியாக, உறுதியான கொள்கை அடித்தளம், வலுவான தேர்தல் இயந்திரம், நம்பகமான தலைமைத்துவம் மற்றும் தாழ்மையுடன் சேவை செய்யும் மனப்பான்மை கொண்ட கட்சிகளே மக்களின் நம்பிக்கையை வென்று நிலையான மற்றும் வலுவான அரசாங்கத்தை அமைக்க முடியும் என குமரேசன் பி.கே. தெரிவித்தார்.







