06 ஜூன் 2026 : மலேசிய அரசாங்கத்தின் டிஜிட்டல் சேவைகளை ஒரே தளத்தில் வழங்கும் மைகோவ் (MyGOV Malaysia) செயலி, 22 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களைப் பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது, நாட்டின் டிஜிட்டல் மாற்ற முயற்சிகளுக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவு மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, அரசாங்க சேவைகளை மக்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் அணுகக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட மைகோவ் செயலி, MADANI அரசாங்கத்தின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும் என்று தெரிவித்தார்.
பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், செயலியின் செயல்திறன், விரிவாக்கத் திறன் மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். எதிர்காலத்தில் மக்களின் தேவைகள் மற்றும் அரசாங்க அமைப்புகளின் தயார்நிலைக்கு ஏற்ப, மேலும் பல சேவைகள் கட்டங்கட்டமாக இணைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுச் சேவைகளின் டிஜிட்டல் மாற்றத்தை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த செயலி, பல்வேறு அரசாங்க அமைப்புகளின் சேவைகளை ஒருங்கிணைத்து மக்களுக்கு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி தற்போது 19 அரசு நிறுவனங்களின் 51 சேவைகளை ஒரே தளத்தில் வழங்குகிறது.
MySejahtera, MyJPJ, PriceCatcher, Portal Manfaat மற்றும் Sumbangan Tunai Rahmah (STR) உள்ளிட்ட முக்கிய சேவைகளும் இந்த செயலியின் மூலம் கிடைக்கின்றன.
இதனிடையே, கால்பந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், 2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை MyGOV செயலி வழியாக இலவசமாக நேரலையில் காணும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. MyDigital ID-யில் பதிவு செய்துள்ள பயனர்கள், தங்களது கைப்பேசிகள் மூலம் எந்த இடத்திலிருந்தும் போட்டிகளை நேரடியாகக் கண்டு மகிழ முடியும்.
2030ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை செயற்கை நுண்ணறிவு சார்ந்த முன்னேற்ற நாடாக மாற்றும் தேசிய இலக்கின் ஒரு பகுதியாக மைகோவ் செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், அரசாங்க அமைப்புகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துதல் மற்றும் நாடு முழுவதும் டிஜிட்டல் பயன்பாட்டை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
மலேசியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கும், ஒருங்கிணைந்த அரசாங்க சேவை வழங்கல் முறையை வலுப்படுத்துவதற்கும் மைகோவ் செயலி முக்கிய பங்காற்றி வருவதாக கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.







