கோலாலம்பூர், 23 அக்டோபர் 2026 : பாரா விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் டி36 (T36) ஓட்டப்பந்தயத்தில் மலேசிய வீரர் அகமது ஃபிஸ்ஸி வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இப்போட்டியில் அகமது ஃபிஸ்ஸி 56.68 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். உஸ்பெகிஸ்தான் வீரர் டோஸ்டன் கஹோரோவ் 54.42 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கத்தையும், ஜப்பான் வீரர் டேக்கேரு மட்சுமோட்டோ 56.12 விநாடிகளில் பந்தயத்தை முடித்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
ஜொகூர் மாநிலத்தின் தம்போய் பகுதியைச் சேர்ந்த அகமது ஃபிஸ்ஸி, 2018ஆம் ஆண்டு பாரா சுக்மா போட்டியில் அறிமுகமானவர். அந்தப் போட்டியில் அவர் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.
மலேசியாவுக்காக மற்றொரு பதக்கத்தை வென்றுள்ள அகமது ஃபிஸ்ஸிக்கு விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.







