என் தமிழ்

இந்தோனேசியா ஓபன் 2026 : காலிறுதியில் போராடி தோல்வியடைந்த பியர்லி டான் – எம். டிணா ஜோடி

ஜகார்த்தா[இந்தோனேசியா], 05 ஜூன் 2026 : இந்தோனேசியா ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரின் மகளிர் இரட்டையர் காலிறுதிப் போட்டியில், மலேசியாவின் முன்னணி ஜோடியான பியர்லி டான் – எம். டிணா, ஜப்பானின் ருய் ஹிரோகாமி – சயாகா ஹோபாரா ஜோடியிடம் போராடி தோல்வியடைந்தனர்.

உலகத் தரவரிசையில் 13ஆவது இடத்தில் உள்ள ஜப்பான் ஜோடியை எதிர்கொண்ட மலேசிய வீராங்கனைகள், முதல் செட்டிலேயே கடுமையான சவாலை அளித்தனர். இருப்பினும், விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த செட்டை 22-20 என்ற புள்ளிக்கணக்கில் ஜப்பான் அணி கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் பேர்லி-திணா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஜப்பான் வீராங்கனைகளின் அனுபவம் மற்றும் துல்லியமான ஆட்டம் காரணமாக 21-16 என்ற கணக்கில் அந்த செட்டையும் இழந்தனர்.

மொத்தம் 46 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், மலேசிய ஜோடி பல கட்டங்களில் சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், வெற்றியைப் பதிவு செய்ய முடியாமல் காலிறுதிச் சுற்றிலேயே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இருப்பினும், உலகின் முன்னணி ஜோடிகளுக்கு எதிராக கடுமையான போட்டியை வழங்கிய பேர்லி டான் மற்றும் எம். திணாவின் ஆட்டம், எதிர்வரும் சர்வதேச போட்டிகளுக்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக பேட்மிண்டன் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த தோல்வியுடன், இந்தோனேசியா ஓபன் 2026 தொடரில் மலேசியாவின் மகளிர் இரட்டையர் பிரிவுக்கான சவால் முடிவுக்கு வந்தது.

Scroll to Top