என் தமிழ்

சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி இடமாற்றத் திட்டத்திற்கு புதிய நம்பிக்கை – யுவனேஸ்வரன்

செகாமாட், 05 ஜூன் 2026 : கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Sungai Muar) இடமாற்றம் மற்றும் புதிய பள்ளிக் கட்டடம் அமைக்கும் திட்டத்திற்கு தற்போது புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

1926ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, அடிக்கடி வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் தோட்டப் பகுதியில் அமைந்துள்ளதுடன், போக்குவரத்து வசதிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இது வெறும் புதிய கட்டடம் அமைப்பது தொடர்பான பிரச்சினை அல்ல என்றும், செகாமாட் பகுதி மாணவர்கள் பாதுகாப்பான, வசதியான மற்றும் ஒழுங்கான சூழலில் கல்வி கற்க வேண்டிய அடிப்படை உரிமையுடன் தொடர்புடைய விடயமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கு முன்னர், 2020 நவம்பர் 12ஆம் தேதி, ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட PTD 16939 என்ற நிலப்பகுதிக்கு பள்ளியை இடமாற்றம் செய்யும் விண்ணப்பத்திற்கு மலேசிய கல்வி அமைச்சு ஒப்புதல் வழங்கியிருந்தது. எனினும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடைமுறைகள் நிறைவேறாத காரணத்தால் அந்த ஒப்புதல் காலாவதியானது.

இதையடுத்து, தற்போதைய நடைமுறைகளுக்கு ஏற்ப புதிய முயற்சிகளை ஒழுங்குமுறையுடன் முன்னெடுத்து வருவதாக யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.

கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எழுப்பி வருவதாகவும், அதனைத் தொடர்ந்து 2024 டிசம்பரில் பள்ளி நிர்வாகத்தினரை நேரில் சந்தித்து புதிய நிலம், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.

மேலும், 2025 ஆகஸ்ட் மாதத்தில் கல்வி அமைச்சுடன் நடைபெற்ற கேள்வி-பதில் அமர்விலும், அதே ஆண்டு நவம்பரில் நடைபெற்ற சிறப்பு நாடாளுமன்ற அமர்விலும் இந்த விவகாரம் மீண்டும் எடுத்துரைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நேற்று, கல்வி துணை அமைச்சர் ஒய்.பி. வோங் கா வோவை அவரது அலுவலகத்தில், பள்ளித் தலைமையாசிரியர், பள்ளி நிர்வாக சபைத் தலைவர் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவருடன் இணைந்து சந்தித்ததாகவும், அப்போது திட்டத்தின் தற்போதைய நிலை, மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் மற்றும் சிறந்த தீர்வுகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கூட்டத்தில், பரிந்துரைக்கப்பட்ட நிலத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்வது, செகாமாட் மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் ஜொகூர் மாநிலக் கல்வித் துறையின் வழிமுறைகளுக்கு ஏற்ப விண்ணப்பத்தை முன்னெடுப்பது, மேலும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் பள்ளி நிர்வாகம் மற்றும் செகாமாட் நாடாளுமன்ற அலுவலகத்துடன் இணைந்து புதிய இடத்தை நேரில் பார்வையிடுவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி இடமாற்ற விவகாரம் வெறும் பேச்சுவார்த்தையாகவே நீடிக்காமல், விரைவில் நடைமுறை தீர்வை எட்டும் வரை தொடர்ந்து கண்காணித்து செயல்படுவேன் என்றும், செகாமாட் மக்களின் கல்வி உரிமைக்காக தனது குரலை தொடர்ந்து எழுப்புவேன் என்றும் யுனேஸ்வரன் ராமராஜ் உறுதியளித்துள்ளார்.

Scroll to Top