கோலாலம்பூர், 23 ஜூலை 2026 : அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட், வியாழக்கிழமை காலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் சற்றே மதிப்பிழந்து காணப்பட்டது. உலகளாவிய முக்கிய நாணயங்களும் அழுத்தத்தை எதிர்கொண்ட நிலையில், மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றம் மற்றும் உலக எண்ணெய், இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழல் முதலீட்டாளர்களை எச்சரிக்கையுடன் செயல்பட வைத்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
காலை 8.00 மணி நிலவரப்படி, ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 4.0855/4.0920 ரிங்கிட்டாக பதிவானது. முந்தைய தின நிறைவு மதிப்பான 4.0850/4.0890 ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில் இது சிறிய அளவிலான சரிவாக இருந்தாலும், உலக நிதிச் சந்தைகளின் தற்போதைய நிலையை பிரதிபலிப்பதாக சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பேங்க் முஆமலாத் மலேசியாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முகமது அஃப்சானிசாம் அப்துல் ரஷீத் கூறுகையில், தற்போது முதலீட்டாளர்களின் முழு கவனமும் அமெரிக்க மத்திய வங்கியின் (Federal Reserve) வட்டி விகித முடிவின் மீது திரும்பியுள்ளது என்றார். குறிப்பாக, செப்டம்பரில் அமெரிக்க மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும் வாய்ப்பு மாத தொடக்கத்தில் 51.5 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 64.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக சந்தை மதிப்பீடுகள் காட்டுகின்றன. இதனால் அமெரிக்க டாலர் தொடர்ந்து வலுவடையும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, SPI Asset Management நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் ஸ்டீபன் இன்னஸ், டாலர் உலகளவில் வலுவடைந்த போதிலும், இந்த வாரம் முழுவதும் ரிங்கிட் ஒப்பீட்டளவில் உறுதியுடன் செயல்பட்டு வருவதாகக் கூறினார். சமீபத்திய வலுவான வர்த்தகத் தரவுகள் மலேசியாவின் வர்த்தக நிலையை மேம்படுத்தியுள்ளதுடன், எரிசக்தி ஏற்றுமதி நாடாக இருக்கும் மலேசியாவுக்கு எண்ணெய் விலை உயர்வு ஒரு அளவிற்கு ஆதரவாக அமைந்துள்ளதாகவும் அவர் விளக்கினார்.
பிற முக்கிய நாணயங்களுடனான ஒப்பீட்டில், ரிங்கிட் ஜப்பான் யெனுக்கு எதிராக சற்றே வலுவடைந்தாலும், யூரோ மற்றும் பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக மதிப்பிழந்தது. பிராந்திய நாணயங்களில், சிங்கப்பூர் டாலர் மற்றும் தாய்லாந்து பாட் ஆகியவற்றுக்கு எதிராகவும் ரிங்கிட் பலவீனமடைந்தது. எனினும், இந்தோனேசிய ரூபியா மற்றும் பிலிப்பைன்ஸ் பெசோவுக்கு எதிராக குறிப்பிடத்தக்க மாற்றம் பதிவாகவில்லை.
உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலை, மத்திய வங்கிகளின் வட்டி விகிதக் கொள்கைகள் மற்றும் எரிசக்தி சந்தையில் நிலவும் பதற்றம் ஆகியவை அடுத்த சில வாரங்களிலும் ரிங்கிட்டின் நகர்வை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.






