கோலாலம்பூர், 05 ஜூன் 2026 : தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சியை (TVET) மேலும் வலுப்படுத்தி, மலேசிய ஆயுதப்படை (ATM) வீரர்கள் மற்றும் ஓய்வுபெறவுள்ள முன்னாள் வீரர்களுக்கு விரிவான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், மலேசிய போக்குவரத்து அமைச்சும் (MOT) பாதுகாப்பு அமைச்சும் (MINDEF) 04/06/2026 அன்று முக்கிய மூலோபாய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஒத்துழைப்பின் மூலம், துறைமுகங்கள், தளவாடங்கள் (Logistics), இரயில்வே, பொதுப் போக்குவரத்து, தரைவழிப் போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலி (Supply Chain) உள்ளிட்ட போக்குவரத்துத் துறையின் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 3,208 வேலைவாய்ப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த முயற்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து எட்டு புரிந்துணர்வு குறிப்புகள் (MoU) பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் பயிற்சி, தொழில்முறை சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் நடைமுறைகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், சாலைப் போக்குவரத்து துறை (JPJ) மலேசிய ஆயுதப்படை வீரர்களின் ஓட்டுநர் அனுபவம் மற்றும் திறன்களை அங்கீகரித்து, தொழில்துறைக்கு தேவையான தொழில்முறை ஓட்டுநர் உரிமம் (Vocational Driving Licence) பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் முயற்சியையும் முன்னெடுத்துள்ளது.
இந்த நடவடிக்கை, ஆயுதப்படை வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்துவதோடு, இராணுவ சேவையிலிருந்து சிவில் தொழில் துறைக்கு அவர்கள் எளிதாக மாறுவதற்கும் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் திறமைகளை மேம்படுத்தி, உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, நாட்டிற்காக சேவையாற்றிய ஆயுதப்படை வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் அனுபவத்தையும் திறமையையும் தேசிய வளர்ச்சிக்காக தொடர்ந்து பயன்படுத்தும் மதானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் வெளிப்பாடாக இந்த ஒத்துழைப்பு அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








