புத்ராஜெயா, 03 ஜூன் 2026 : தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET) துறையின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் தேசிய TVET தினம் 2026, வரும் ஜூன் 5 முதல் 7ஆம் தேதி வரை புத்ராஜெயா சதுக்கத்தில் (Dataran Putrajaya) சிறப்பாக நடைபெறவுள்ளது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள், இளைஞர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியின் முதல் பகுதியாக “மினி மேடை” நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் தொழில்நுட்ப விளக்கக் காட்சிகள், குறுந்தகவல் உரைகள், கஹூட் (Kahoot) வினாடி வினா போட்டிகள், சிறிய விளையாட்டுகள் மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறும்.
இரண்டாவது பகுதியாக “Future Skills Showcase” நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ட்ரோன் (UAS) தொழில்நுட்பம், தன்னியக்க மொபைல் ரோபோட்கள், 3D டிஜிட்டல் கேம் ஆர்ட்ஸ் மற்றும் Additive Manufacturing போன்ற எதிர்கால தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
மேலும், தேசிய TVET தினத்தின் முக்கிய அம்சமாக “TVET Drone Soccer League 2026” போட்டியும் நடைபெறுகிறது. இதில் அரசு மற்றும் தனியார் TVET நிறுவனங்களைச் சேர்ந்த 19 அணிகளிலிருந்து 79 போட்டியாளர்கள் பங்கேற்று ட்ரோன் சாக்கர் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.
அதேவேளை, “Galeri Gemilang WSM” எனும் சிறப்பு கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் WorldSkills Malaysia, ASEAN Skills, Asia Skills மற்றும் WorldSkills International போட்டிகளில் மலேசியப் போட்டியாளர்கள் பெற்றுள்ள சாதனைகள் மற்றும் வெற்றிகள் காட்சிப்படுத்தப்படும்.
காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் இலவசமாக வருகை தரலாம். தொழில்நுட்பம், புதுமை மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு திறன்கள் குறித்து அறிந்து கொள்ள விரும்புவோருக்கு இந்த நிகழ்ச்சி சிறந்த வாய்ப்பாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இளைஞர்கள் TVET துறையின் வாய்ப்புகளை நேரடியாக அனுபவித்து அறிந்துகொள்ளவும், தொழில்நுட்ப முன்னேற்றங்களை நெருக்கமாகக் காணவும் தேசிய TVET தினம் 2026 முக்கிய தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.











