கோலாலம்பூர், 03 ஜூன் 2026 : எஸ்பிஎம் (SPM) தேர்வில் விருப்பப் பாடமாக தமிழ்மொழியைத் தேர்வு செய்ய விரும்பும் மாணவர்கள் எதிர்கொள்ளும் நிர்வாகத் தடைகள் குறித்து கவலை தெரிவித்துள்ள மக்கள் நீதிக் கட்சியின் (PKR) மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினரும் துணைப் பொதுச் செயலாளருமான சிவமலர் கணபதி, தமிழ்மொழிக் கல்வி அதிகாரத்துவ சிக்கல்களால் பாதிக்கப்படக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீ முருகன் மையத்தின் தலைவர் சுரேன் கந்தா எழுப்பியுள்ள பிரச்சினைகளைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள் தங்களது மொழி உரிமையையும் பண்பாட்டு அடையாளத்தையும் பாதுகாக்கும் வாய்ப்பை உறுதி செய்வது கல்வி அமைச்சின் முக்கிய பொறுப்பாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு நாடு முழுவதும் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டு கல்வியைத் தொடங்கிய 13,688 மாணவர்களில், 2024ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் தமிழ்மொழி பாடத்தை எழுதியவர்கள் 7,609 பேர் மட்டுமே எனத் தரவுகள் காட்டுகின்றன. இது சுமார் 45 விழுக்காடு வீழ்ச்சியைக் குறிக்கிறது.
இந்த குறிப்பிடத்தக்க சரிவை அலட்சியப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ள சிவமலர், மாணவர்களின் அணுகல் வசதி, பள்ளி மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விதிமுறைகள், நிர்வாக நடைமுறைகள், பெற்றோர் மற்றும் மாணவர்களிடையேயான விழிப்புணர்வு மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்மொழிக் கல்விக்கு வழங்கப்படும் ஆதரவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தீவிர ஆய்வு தேவைப்படுவதாகக் கூறினார்.
2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்மொழிக் கல்வியை எளிதாகப் பெறும் வகையில் நடைமுறைகளை மறுஆய்வு செய்யுமாறு கல்வி அமைச்சுக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்த நடவடிக்கை சமூகத்தின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் முக்கிய முயற்சியாகக் கருதப்பட்டதாக அவர் நினைவூட்டினார்.
மேலும், மலாயா பல்கலைக்கழகத்தில் 2024ஆம் ஆண்டு திருவள்ளுவர் இருக்கை நிறுவப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழ்மொழி, இலக்கியம், ஆய்வு மற்றும் தமிழரின் அறிவுசார் பாரம்பரியத்தை உயர்ந்த கல்வி நிலைக்கு கொண்டு செல்லும் இந்த முயற்சி, நாட்டின் பன்முக பண்பாட்டு அடையாளத்தில் தமிழ்மொழியின் முக்கியத்துவத்தை அரசாங்கம் அங்கீகரிப்பதைக் காட்டுவதாக அவர் கூறினார்.
இவ்வாறான உறுதிப்பாடுகள் இருந்தபோதிலும், தமிழ்மொழி பாடத்தில் சேர விரும்பும் மாணவர்கள் இன்னும் தேவையற்ற நிர்வாகத் தடைகளை எதிர்கொள்வதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருவதாக சிவமலர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு பாங்கியில் நான்கு மாணவர்கள் எஸ்பிஎம் தமிழ்மொழி பாடத்திற்கு பதிவு செய்ய முடியாமல் தடுக்கப்பட்ட சம்பவம், பின்னர் பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தலையீட்டிற்குப் பிறகே தீர்க்கப்பட்டதை அவர் எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டினார்.
“தமிழ்மொழியைக் கற்கவும், தேர்வெழுதவும் விரும்பும் மாணவர்கள் தேவையற்ற அதிகாரத்துவ நடைமுறைகள், முரண்பட்ட விதிமுறை விளக்கங்கள் மற்றும் தவிர்க்கக்கூடிய நிர்வாகத் தடைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. கல்வி மற்றும் மொழி உரிமைகள் ஒருபோதும் சிவப்பு நாடா நடைமுறைகளின் பலியாக மாறக்கூடாது,” என்று அவர் வலியுறுத்தினார்.
இதையடுத்து, தற்போதைய நடைமுறைகளை கல்வி அமைச்சு முழுமையாக மறுஆய்வு செய்து, மாணவர் பங்கேற்பு குறைவதற்கான காரணங்களை கண்டறிந்து, தமிழ்மொழிக் கல்வி மற்றும் எஸ்பிஎம் தேர்வுக்கான அணுகலை நாடு முழுவதும் உறுதி செய்யும் தெளிவான கொள்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
தமிழ்மொழிக் கல்வியின் எதிர்காலம் ஒவ்வொரு பிரச்சினையும் எழும்போதும் தற்காலிக தலையீடுகளின் அடிப்படையில் இருக்க முடியாது என்றும், நிலையான, வெளிப்படையான மற்றும் மாணவர்களை மையமாகக் கொண்ட தீர்வு அவசியம் என்றும் சிவமலர் கணபதி தெரிவித்தார்.






