நியூ டெல்லி, 01 ஜூன் 2026 : இந்திய உச்சநீதிமன்றத்திற்கு ஐந்து புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு இந்த நியமனங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்களின் அடிப்படையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, பம்பாய் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் பள்ளி மற்றும் மூத்த வழக்கறிஞர் வி. மோகனா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உயர்த்தப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் அங்கீகரிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 34 இலிருந்து 38 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், காலியாக இருந்த இடங்களை நிரப்பும் நடவடிக்கையாக இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் வழக்குகளின் எண்ணிக்கையை சமாளித்து, விரைவான நீதியை வழங்கும் நோக்கிலும் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.
புதிய நீதிபதிகள் பதவியேற்றதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் செயல்திறன் மேலும் மேம்படும் என்றும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரிக்க உதவியாக இருக்கும் என்றும் சட்ட வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.






