01 ஜூன் 2026 : ஈரானின் ரேடார் அமைப்புகள் மற்றும் ட்ரோன் கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து அமெரிக்க ராணுவம் வார இறுதியில் துல்லியமான வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் MQ-1 வகை கண்காணிப்பு ட்ரோன் ஒன்று சர்வதேச கடற்பரப்பில் செயல்பட்டு கொண்டிருந்தபோது ஈரான் தரப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி நடவடிக்கையாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானின் கோருக் (Goruk) பகுதி மற்றும் கெஷ்ம் (Qeshm) தீவில் அமைந்திருந்த ரேடார் மையங்கள், ட்ரோன் கட்டுப்பாட்டு நிலையங்கள் மற்றும் வான்வழி பாதுகாப்பு தொடர்பான சில அமைப்புகள் தாக்குதலின் இலக்குகளாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கடற்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்ட சில தாக்குதல் ட்ரோன்களும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் ஆதரவு படைகள் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குவைத்தில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் எச்சரிக்கைகள் ஒலித்த நிலையில், அந்நாட்டு வான்பாதுகாப்பு அமைப்புகள் பல அச்சுறுத்தல்களை இடைமறித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் முயற்சிகள் தொடர்ந்தாலும், சமீபத்திய தாக்குதல்கள் அந்த அமைதி முயற்சிக்கு புதிய சவாலாக மாறியுள்ளன.
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் அறிகுறிகள் தென்படுவதால், உலக நாடுகள் இந்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. குறிப்பாக ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எண்ணெய் வர்த்தகம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக சர்வதேச கவலை அதிகரித்துள்ளது.






