நெகிரி செம்பிலான், 16 ஜூலை 2026 : மலேசிய பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டை கொண்டாடும் வகையில் ‘MAARGAM: NATYA, RAAGA, RASA’ என்ற தலைப்பில் பிரம்மாண்டமான பரதநாட்டிய இசைநாடக நிகழ்ச்சி, வரும் செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
மலேசிய பாரம்பரிய மற்றும் கலைச் சங்கம் (Persatuan Kebudayaan & Kesenian Warisan Malaysia), இசை ஹெரிடாஜ் (Isai Heritaj), நாதாலயா மியூசிக் அகாடமி (Nadhalaya Music Academy) மற்றும் சுவர்ணா தார்ஷ்யி ஃபைன் ஆர்ட் (Suwarna Thaarshyy Fine Art) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன.
இரவு 8.30 மணிக்கு, நெகிரி செம்பிலான் தேசிய கலாச்சார மற்றும் கலைத்துறை (JKKN) முதன்மை அரங்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், பரதநாட்டியத்தின் அழகிய அசைவுகள், கர்நாடக இசையின் இனிமை மற்றும் நேரடி இசைக் குழுவின் பின்னணியில், கலை, பண்பாடு மற்றும் உணர்வுகளை ஒருங்கிணைக்கும் சிறப்பான மேடைநிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.
‘நாட்டியம் (Natya) – ராகம் (Raaga) – ரசம் (Rasa)’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு, பாரம்பரியம், இசை, நடனம் மற்றும் உணர்வுகளின் சங்கமமாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு மற்றும் கூடுதல் தகவல்களுக்கு ஜரினா (016-243 8182) அல்லது கஸ்தூரி (012-750 4070) ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.







