பெனாம்பாங், 31 மே 2026 : தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ், சபா மாநில அளவிலான காமத்தான் திருவிழா 2026 கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு, மலேசியாவின் பன்முக கலாச்சார ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
கடசான்டுசூன் கலாச்சார சங்கத்தின் (KDCA) ஹோங்கோட் கொய்சான் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அமைச்சரவை உறுப்பினர்களுடன் இணைந்து தொடக்கி வைத்தார்.
நிகழ்வில் பங்கேற்ற யுனேஸ்வரன் ராமராஜ், சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் பல்லின சமூகங்களின் கலாச்சார மரபுகளைப் பாதுகாத்து, கௌரவித்து, மேம்படுத்துவதில் மதானி அரசாங்கம் தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மலேசியா போன்ற பன்மைத்துவ நாட்டில் கலாச்சாரம் மக்களை இணைக்கும் பாலமாக விளங்குகிறது என்றும், பல்வேறு இனங்களின் பாரம்பரியங்களே நாட்டின் ஒற்றுமை மற்றும் வலிமையின் அடித்தளமாக அமைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
அறுவடைத் திருநாளாக கொண்டாடப்படும் காமத்தான் விழா, நன்றியுணர்வின் அடையாளமாக மட்டுமல்லாமல், தலைமுறை தலைமுறையாகப் பேணப்பட்டு வரும் கலாச்சாரம், மரபுகள் மற்றும் ஒற்றுமையின் விழுமியங்களைப் போற்றும் சிறப்புமிக்க நிகழ்வாகவும் திகழ்கிறது என்றார்.
மேலும், பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்களை ஒன்றிணைத்து நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதையை வலுப்படுத்தும் தளமாக காமத்தான் திருவிழா விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சபா மக்களுக்கும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் காமத்தான் திருவிழா வாழ்த்துகளைத் தெரிவித்த யுனேஸ்வரன் ராமராஜ், கலாச்சார பன்முகத்தன்மையை மதித்து தேசிய ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார். “கோடோபியன் தடாவ் தகாசோ தோ காமடன்” என்ற பாரம்பரிய வாழ்த்துடன் அவர் தனது செய்தியை நிறைவு செய்தார்.






