புத்ராஜெயா, 31 மே 2026 : உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகம் (KPDN), நுகர்வோர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் திருத்தப்பட்ட வாடகை-வாங்கு சட்டம் 2026-ஐ (Akta Sewa Beli (Pindaan) 2026) ஜூன் 1, 2026 முதல் அமல்படுத்துகிறது.
புதிய சட்டத்தின் கீழ், வாடகை-வாங்கு நிதியுதவி முறைமை மேலும் வெளிப்படையானதாகவும் நியாயமானதாகவும் மாற்றப்படுவதுடன், நுகர்வோர் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த திருத்தம், 1967 ஆம் ஆண்டு வாடகை-வாங்கு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய சீர்திருத்தமாகும். நுகர்வோர் கடன் வழங்கல் சூழலை மேம்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இது அமைகிறது.
இதற்கு முன்பு, குறிப்பாக வாகனக் கடன்களில், மறைமுக வட்டி கட்டணங்கள் மற்றும் கடனை முன்கூட்டியே செலுத்தினாலும் அதிக வட்டித் தொகை செலுத்த வேண்டிய நிலைமை தொடர்பாக பல புகார்கள் எழுந்திருந்தன.
இந்த திருத்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, “Flat Rate” எனப்படும் சம வட்டி கணக்கீட்டு முறையும் “Rule of 78” முறையும் ரத்து செய்யப்படுவதாகும். இம்முறைகளில் ஆரம்ப தவணைகளின் பெரும்பகுதி வட்டிக்காக ஒதுக்கப்பட்டதால், கடனை முன்கூட்டியே முடிக்க விரும்பும் நுகர்வோர் பாதிக்கப்பட்டனர்.
அதற்குப் பதிலாக, “Reducing Balance Method” எனப்படும் குறையும் நிலுவைத் தொகை முறையும் “Effective Interest Rate” எனப்படும் நடைமுறை வட்டி கணக்கீட்டு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடனின் நிலுவைத் தொகையை அடிப்படையாகக் கொண்டு வட்டி கணக்கிடப்படுவதால், நுகர்வோருக்கு அதிக நியாயமான மற்றும் வெளிப்படையான நிதி அமைப்பு கிடைக்கும்.
மேலும், டிஜிட்டல் மாற்றத்திற்கு ஏற்ப மின்னணு கையொப்பங்கள் மற்றும் மின்னணு ஆவணங்களைப் பயன்படுத்த சட்டம் அனுமதி வழங்குகிறது. இதன் மூலம் ஒப்பந்த செயல்முறைகள் வேகமாகவும் திறமையாகவும் நடைபெறும். அதேவேளை, கடன் பெறுநர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த “Due Diligence” நடைமுறைகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
சட்டம் அமலுக்கு வரும் முதல் கட்டத்தில், 11 நிதி நிறுவனங்கள் மற்றும் வாடகை-வாங்கு சேவை வழங்குநர்கள் புதிய விதிமுறைகளுக்கு இணங்க சேவைகளை வழங்க முழுமையாக தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட அமலாக்கம் செப்டம்பர் 2026 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சட்டத்தின் பயன்களைப் பெற விரும்பும் நுகர்வோர், வாடகை-வாங்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் தகவல்களை சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், புதிய சட்ட அமைப்புக்கு இன்னும் முழுமையாக மாறாத நிதி நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு 2027 மார்ச் 31 வரை இடைக்கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்திற்குள் தங்களது அமைப்புகளை மேம்படுத்தி, புதிய சட்டத்தின்படி சேவைகளை வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த சட்டச் சீர்திருத்தம், நாட்டில் வெளிப்படையான, நம்பகமான மற்றும் பொறுப்பான நுகர்வோர் கடன் சூழலை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோக் அர்மிசான் முகமது அலி தெரிவித்தார்.






