கோலாலம்பூர், 15 ஜூலை 2026 : 34ஆவது தென்கிழக்காசிய (SEA) விளையாட்டுப் போட்டி மற்றும் 14ஆவது ஆசியான் மாற்றுத்திறனாளிகள் (ASEAN Para Games) போட்டிகளை முன்னிட்டு, மலேசியா 2027-இன் அதிகாரப்பூர்வ இலச்சினை, சின்னம் (மாஸ்காட்) மற்றும் ‘ஒற்றுமையைக் கொண்டாடுவோம்’ (Celebrating Unity) என்ற கருப்பொருள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வை இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முகம்மது தௌபிக் ஜொகாரி தொடக்கி வைத்தார். இதில் மலேசிய பாராலிம்பிக் கவுன்சில் தலைவர் டத்தோஸ்ரீ மெகாட் டி. ஷாரிமான் ஜஹாருடின், விளையாட்டுத் துறை நிர்வாகிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
புதிய இலச்சினை, சின்னம் மற்றும் கருப்பொருள், விளையாட்டு உணர்வு, ஒற்றுமை மற்றும் மலேசியா மற்றும் ஆசியான் நாடுகளின் நட்புறவை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிமுகம், 2027ஆம் ஆண்டு தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய இரு விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் மலேசியாவின் பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவைத்துள்ளது. புதிய அடையாளம், போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கும், சர்வதேச அரங்கில் மலேசியாவின் விளையாட்டுத் திறனை மேலும் உயர்த்துவதற்கும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






