என் தமிழ்

உண்மைத் தகவல்களின் காவலர்களாக செய்தியாளர்கள் தொடர வேண்டும் – ஃபஹ்மி ஃபட்சில் வாழ்த்து

கோலாலம்பூர், 29 மே 2026 : தகவல்கள் கணநேரத்தில் பரவக்கூடிய இன்றைய டிஜிட்டல் யுகத்தில், வதந்திகளும் தவறான தகவல்களும் எளிதில் பரவுகின்ற சூழ்நிலையில், செய்தியாளர்கள் உண்மை மற்றும் நம்பகமான தகவல்களின் காவலர்களாக முக்கியப் பங்கு வகித்து வருவதாக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் திரு. ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

தேசிய செய்தியாளர் தினமான ஹவானா (HAWANA) 2026-ஐ முன்னிட்டு வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களின் பணி நிகழ்வுகளைப் பதிவு செய்து செய்தியாக வெளியிடுவதில் மட்டுப்படுத்தப்படவில்லை என்றும், சமூகத்தில் குழப்பம் மற்றும் ஊகங்கள் நிலவும் நேரங்களில் உண்மையை நிலைநாட்டும் முக்கியக் குரல்களில் ஒருவராக அவர்கள் திகழ்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களிடம் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு செய்தியும் ஆழமான ஆய்வு, உறுதிப்படுத்தல் மற்றும் உயர்ந்த பொறுப்புணர்வுடன் தயாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர், பொதுமக்களின் நம்பிக்கை என்பது எளிதில் பெறப்படக்கூடிய ஒன்று அல்ல என்றும், அது நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் மூலம் மட்டுமே உருவாகும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஊடகத் துறையினர் நேர்மையையும் உண்மையையும் தங்களின் அடிப்படை கொள்கைகளாகக் கொண்டு செயல்பட்டால், அவர்கள் தொடர்ந்து சமூகத்திற்கு நம்பகமான தகவல்களை வழங்கும் உறுதியான அரணாக இருப்பார்கள் என்றார்.

“பத்திரிகைத்துறை என்பது வெறும் செய்திகளைப் பரப்பும் பணியல்ல; அது மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் பொறுப்பும், சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஓர் உயரிய கடமையுமாகும்” என்று ஃபஹ்மி ஃபட்சில் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய செய்தியாளர் தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து ஊடகப் பணியாளர்களுக்கும் அவர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Scroll to Top