புதுச்சேரி, 14 ஜூலை 2026 : 2026–27 நிதியாண்டிற்கான ரூ.14,300 கோடி மதிப்பிலான புதுச்சேரி அரசின் முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, அந்த பட்ஜெட்டை புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கான வழி உருவாகியுள்ளது.
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலையில், ஐந்து மாதங்களுக்கு ரூ.5,396 கோடி மதிப்பிலான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன் காலம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய உள்ளதால், தற்போது முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய அரசு தயாராகி வருகிறது.
புதுச்சேரி அரசு தயாரித்த பட்ஜெட் முன்மொழிவை மத்திய உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகத்துடன் இணைந்து ஆய்வு செய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் அனுமதி வழங்கியுள்ளது. இந்த பட்ஜெட், கடந்த நிதியாண்டின் ரூ.13,600 கோடி ஒதுக்கீட்டைவிட ரூ.700 கோடி அதிகமாகும்.
இந்த பட்ஜெட்டில், வருவாய் வரவாக ரூ.11,965.07 கோடியும், மூலதன வரவாக ரூ.2,334.93 கோடியும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த தேவையான கடன் வசதிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட்டப்பட்டு, முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






