புத்ராஜெயா, 29 மே 2026 : தேசிய டிவெட் தினம் (Hari TVET Negara) 2026 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள TVET தொழில் வாய்ப்பு திருவிழா (Karnival Kerjaya TVET), வேலை தேடுபவர்களுக்கும் தொழில் முன்னேற்றத்தை நாடுபவர்களுக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் ஆதரவு சேவைகளை வழங்கவுள்ளது.
தொழில்நுட்ப மற்றும் தொழிற்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் முதல் தொழில் ஆலோசனை மற்றும் வேலைவாய்ப்பு உதவிச் சேவைகள் வரை பல்வேறு வசதிகள் இத்திருவிழாவில் இடம்பெறுகின்றன. இந்நிகழ்வு இளைஞர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உதவும் முக்கிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் பங்கேற்பாளர்கள் தங்களின் வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை நேரடியாகச் சமர்ப்பிக்கும் வாய்ப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிவெட் தொழில் வாய்ப்பு திருவிழா, ஜூன் 5 முதல் 7, 2026 வரை புத்ராஜெயா சதுக்கத்தில் (Dataran Putrajaya) நடைபெறவுள்ளது. தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.
நாட்டின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வித் துறையை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய டிவெட் தினம் 2026, திறன்களை வளர்த்துக்கொள்ளவும், தொழில் வாய்ப்புகளை ஆராயவும், நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் சிறந்த வாய்ப்பாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“தொழில் வாழ்க்கைக்கான முதல் தேர்வு – TVET” என்ற நோக்கத்துடன் நடைபெறும் இந்நிகழ்வு, திறன் அடிப்படையிலான கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்துகிறது.







