என் தமிழ்

மக்கள் புகார்களை திறம்பட கையாள ‘ஒம்புட்ஸ்மேன்’ அமைப்பு : நல்ல முன்னெடுப்பு என EAIC வரவேற்பு

கோலாலம்பூர், 26 மே 2026 : மக்களின் புகார்களை மேலும் திறம்பட கையாளும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள “ஒம்புட்ஸ்மேன் மலேசியா” அமைப்பு, பொதுச் சேவை தரத்தை மேம்படுத்தும் சிறந்த முன்னெடுப்பாகக் கருதப்படுவதாக அமலாக்க அமைப்புகளின் நேர்மைக் கண்காணிப்பு ஆணையம் (EAIC) தெரிவித்துள்ளது.

EAIC தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் பாக்கர் கூறுகையில், அரசாங்க சேவைகளில் ஏற்படும் தவறான நடத்தை, தவறான நிர்வாகம் மற்றும் சேவை வழங்கல் குறைபாடுகள் தொடர்பான மக்களின் புகார்களை பதிவு செய்யும் முக்கிய தளமாக ஒம்புட்ஸ்மேன் மலேசியா செயல்படும் என்றார்.

மேலும், இந்த அமைப்பு பொதுச் சேவையை மேலும் திறமையானதாகவும் மக்களின் தேவைகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் மாற்ற உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது இந்த அமைப்பை உருவாக்கும் சட்ட முன்வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அடுத்தாண்டில் இது செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக வெளியான தகவல்களில், ஒம்புட்ஸ்மேன் மலேசியா மையப்படுத்தப்பட்ட புகார் மேலாண்மை அமைப்பின் மூலம் புகாரளிப்போரின் அடையாளத்தை பாதுகாப்பதற்கும், தகவல் கசிவுகளைத் தடுப்பதற்கும் முக்கிய பங்காற்றும் என கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரதமர் துறையின் சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சரான டத்தோ ஸ்ரீ அசலினா ஒத்மான் சயீத் முன்னதாக வெளியிட்டிருந்த அறிக்கையில், ஒம்புட்ஸ்மேன் மலேசியா ஒரு சுயாதீன அமைப்பாக இயங்கி, அரசாங்கத் துறைகள் மற்றும் முகமைகள் தொடர்பான பொதுமக்கள் புகார்களை வெளிப்படையான முறையில் கையாளும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த அமைப்பு, தகவல் சுதந்திரச் சட்டம் (FOI) மற்றும் தகவல் வழங்குபவர்களின் பாதுகாப்புச் சட்டத்துடன் இணைந்து செயல்பட்டு, நாட்டின் பொதுநிர்வாக நேர்மையையும் பொறுப்புணர்வையும் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top