சீனா, 10 ஜூலை 2026 : சீனாவின் ஓர்டோஸ் நகரில் நடைபெற்ற ஆசிய 23 வயதுக்குட்பட்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், மலேசியாவின் தேசிய ஓட்டப்பந்தய வீரர் முகமது அஸீம் ஃபஹ்மி, ஆடவர் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
22 வயதான அஸீம், இறுதிப்போட்டியில் 10.17 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார். இதன் மூலம், ஆசிய 23 வயதுக்குட்பட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். ஈராக்கின் ஃபலாஹ் ஹசன் அல்-கசாலி 10.21 விநாடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கத்தையும், கத்தாரின் சலாஹ் அல்-யூனிஸ் 10.23 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், அஸீம் 10.15 விநாடிகளில் ஓடி எட்டு தகுதி பெற்ற வீரர்களில் அதிவேக நேரத்தை பதிவு செய்திருந்தார்.
இந்த வெற்றி, வரும் செப்டம்பரில் ஜப்பானின் நகோயா–ஐச்சியில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அவரது தயாரிப்புக்கு மேலும் ஊக்கமளிப்பதாகக் கருதப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த அஸீம், இம்முறை அதைவிடச் சிறந்த சாதனையை நோக்கி தயாராகி வருகிறார்.
2022ஆம் ஆண்டு கொலம்பியாவின் காலி நகரில் நடைபெற்ற உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 10.09 விநாடிகளில் ஓடி, மலேசியாவின் தேசிய சாதனையைப் படைத்த வீரர் என்ற பெருமையும் அஸீமுக்கு உள்ளது.






