புத்ராஜெயா, 26 மே 2026 : மலேசியாவின் டிஜிட்டல் அமைச்சர் மாண்புமிகு கோபிந்த் சிங் தேவோ, சரவாக் மாநில துணை அரசுச் செயலாளர் (பொருளாதார திட்டமிடல் மற்றும் மேம்பாடு) டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமது அப்துல்லா பின் ஹாஜி ஸைடெல் மற்றும் சரவாக் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சின் உதவி தலைமைச் செயலாளர் டாக்டர் கோ லிப் கூன் ஆகியோரை 25 மே 2026 அன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பு, சரவாக் டிரான்சிஷனிங் இன்டஸ்ட்ரியல் கிளஸ்டர் (TIC) பிந்துலு தொடர்பான விரிவான விளக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் முக்கிய வாய்ப்பாக அமைந்தது. உலக பொருளாதார மன்றத்தின் (WEF) தொழில்துறை மாற்றுத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் அறிமுகமாகும் முதல் முயற்சியாக இந்த TIC Bintulu திட்டம் கருதப்படுகிறது.
வரும் ஜூன் 9 முதல் 11ஆம் தேதி வரை குச்சிங்கில் நடைபெறவுள்ள APGH 2026 நிகழ்வின் போது இந்த முயற்சி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த கோபிந்த் சிங் தேவோ, “இந்த முயற்சி மலேசியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியையும், நாட்டின் தொழில்துறை மாற்றத் திட்டங்களையும் எவ்வாறு வலுப்படுத்தும் என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது,” என்றார்.
மேலும், TIC Bintulu திட்டம், தொழில்நுட்பம், நிலைத்தன்மை மற்றும் தொழில்துறை புதுமைகளை ஒருங்கிணைத்து, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.









