கோலாலம்பூர், 26 மே 2026 : “நாம் பொய், நம் சேவையே மெய்” என்ற உயரிய கொள்கையை முன்னிறுத்தி செயல்பட்ட மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் முதலாவது தேசியத் தலைவர் அமரர் சமூகக் கலைமணி சா.ஆ. அன்பானந்தன் AMN, PPN அவர்களின் 46ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசியத் தலைவராக 1966ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய சா.ஆ. அன்பானந்தன், தமிழ் இளைஞர் இயக்க வளர்ச்சிக்கும் சமூக சேவைக்கும் முக்கிய பங்காற்றியவராக போற்றப்படுகிறார்.
சமூகச் சேவையில் மட்டுமல்லாது, அவர் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், திறமையான நாடக மேடைக் கலைஞராகவும், சிறந்த மேடைப் பேச்சாளராகவும் தனித்துவம் பெற்றிருந்தார். தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் சமூக ஒற்றுமையை முன்னிறுத்தும் பணிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
அன்பிற்கும் மனிதநேயத்திற்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்த சா.ஆ. அன்பானந்தன், தமது 41வது வயதில் 26 மே 1980ஆம் ஆண்டு காலமானார். எனினும், அவர் ஆற்றிய சமூகப் பணி மற்றும் இளைஞர் சேவை இன்றளவும் தமிழ் சமூகத்தில் அழியாத நினைவாகத் திகழ்கிறது.
இந்த நினைவு தினத்தை முன்னிட்டு மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசியத் தலைவர், நிர்வாகமன்ற உறுப்பினர்கள், மாநிலப் பேரவை நிர்வாகிகள், மன்றத் தலைவர்கள் மற்றும் மணிமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அன்னாரின் சேவையை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.
சா.ஆ. அன்பானந்தனின் சமூகப் பற்றும் சேவை மனப்பான்மையும் வருங்கால தமிழ் இளைஞர்களுக்கு தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.






