என் தமிழ்

மலேசியா – இந்தியா உறவை வலுப்படுத்திய பி.என். ரெட்டிக்கு ரமணன் ராமகிருஷ்ணன் பாராட்டு

புத்ராஜெயா, 26 மே 2026 : மலேசியாவுக்கான இந்திய தூதர் திரு பி.என். ரெட்டி, தனது தூதரகப் பணிக்காலத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், மனித வளத்துறை அமைச்சர் திரு ரமணன் ராமகிருஷ்ணனை 25 மே 2026 அன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, மலேசியா மற்றும் இந்தியா இடையிலான நட்புறவையும் உத்திசார் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதில் பி.என். ரெட்டி ஆற்றிய அர்ப்பணிப்பு மற்றும் முக்கிய பங்களிப்பிற்காக அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் உயரிய பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மேலும், இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளும் முக்கிய தளமாக அமைந்தது. மலேசியாவும் இந்தியாவும் தற்போது விரிவான உத்திசார் பங்காளிகளாக வளர்ந்து வரும் நிலையில், பொருளாதாரம், மனிதவள மேம்பாடு மற்றும் பிராந்திய வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

பி.என். ரெட்டி தனது பதவிக்காலம் முழுவதும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையே மரியாதை மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட நட்புறவை உருவாக்கியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மலேசியா, இந்தியாவுடனான வலுவான இருதரப்பு உறவை தொடர்ந்து விரிவுபடுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும், இந்த ஒத்துழைப்பு இரு நாடுகளின் மக்களுக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பயனளிக்கும் என்றும் ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Scroll to Top