கோலாலம்பூர், 17 மே 2026 : TM ISTAF செபக்டக்ரா உலகக் கோப்பை கோலாலம்பூர் 2026 போட்டித் தொடர், 2026 மே 16 முதல் 23 வரை கோலாலம்பூரிலுள்ள திதிவாங்சா மைதானத்தில் (Titiwangsa Stadium) நடைபெறவுள்ளது. இந்த ஆண்டின் உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 14 நாடுகள் தங்களது பங்கேற்பை உறுதி செய்துள்ளன. இதன் மூலம், 2011 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த மதிப்புமிக்க சர்வதேச போட்டியை மலேசியா மூன்றாவது முறையாக நடத்துகிறது.
இந்த உலகக் கோப்பை தொடரின் தொடக்க விழா, 2026 மே 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள தேவான் துன் ஹுசைன் ஓன் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் (OCM) தலைவரும், தென்கிழக்கு ஆசிய விளையாட்டு கூட்டமைப்பின் (SEAGF) தலைவரும், தென்கிழக்கு ஆசிய மண்டலத்திற்கான ஆசிய ஒலிம்பிக் மன்றத்தின் (OCA) துணைத் தலைவருமான டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ (டாக்டர்) முகமது நோர்சா ஜகாரியா அவர்கள் நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
தனது உரையில், சர்வதேச செபக்டக்ரா சமூகத்தை மீண்டும் மலேசியாவிற்கு வரவேற்பதில் பெருமிதம் அடைவதாக அவர் தெரிவித்தார். 1965-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற 3-வது SEAP விளையாட்டுப் போட்டிகளில் இருந்து செபக்டக்ரா உலகளாவிய வளர்ச்சியை நோக்கி பயணித்துள்ளதாகவும், இந்த ஆண்டு நிகழ்வு ஒரு “தாயகத் திரும்புதல்” என்ற பெருமையைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மலேசிய செபக்டக்ரா சங்கத்தின் (PSM) தலைவரும் OCM துணைத் தலைவருமான டத்தோ முகமது சுமாலி ரெடுவானின் தலைமைத்துவத்தை அவர் பாராட்டினார். 2022 முதல் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் செபக்டக்ராவை தொழில்முறை விளையாட்டாக உயர்த்தியதுடன், திதிவாங்சா மைதானத்தை “செபக்டக்ராவின் தாயகம்” என அறிவிக்கும் நிலையை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, காம்பங் பாருவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மலேசிய செபக்டக்ரா அகாடமி, நாட்டின் உயர் செயல்திறன் விளையாட்டு மையமாக உருவெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ தொழில்நுட்பக் கூட்டாளரான டெலிகாம் மலேசியா (TM) நிறுவனத்திற்கும் அவர் நன்றி தெரிவித்தார். நவீன விளையாட்டுகளின் வளர்ச்சியில் பெருநிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானது என்றும், ரசிகர்களையும் விளையாட்டையும் இணைக்கும் பணியில் TM தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் பாராட்டினார்.
சர்வதேச செபக்டக்ரா கூட்டமைப்பின் (ISTAF) தலைமைத்துவத்தையும் அவர் பாராட்டியதுடன், திரு. பூன்சாய் லோர்பிபாட் மற்றும் டத்தோ அப்துல் ஹலீம் அப்துல் காதர் ஆகியோரின் முயற்சிகள் செபக்டக்ராவை தென்கிழக்கு ஆசிய எல்லைகளைத் தாண்டி உலக அரங்கிற்கு கொண்டு சென்றுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த விழாவில் ISTAF பொதுச் செயலாளர் டத்தோ அப்துல் ஹலீம் அப்துல் காதர், தேசிய விளையாட்டு மன்றத்தின் தலைமை இயக்குநர் ஜெஃப்ரி என்காடிரின், டிஎம் ஒன் நிர்வாக துணைத் தலைவர் சாந்தி ஜூசிந்தா ஜொஹாரி, டத்தோஸ்ரீ அப்துல் புஹாட் மாட் நயன், டத்தோ அப்துல் ஹலிம் சுலைமான் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
2024 ISTAF உலகக் கோப்பையில் ஆடவர் இரட்டையர் மற்றும் இன்டர் ரெகு பிரிவுகளில் மலேசியா வென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கங்கள், மேலும் 2025 தாய்லாந்து SEA Games போட்டிகளில் ஆடவர் அணி ரெகு மற்றும் ரெகு பிரிவுகளில் பெற்ற இரட்டைத் தங்க வெற்றிகள் ஆகியவை மலேசிய செபக்டக்ராவின் தற்போதைய எழுச்சியை வெளிப்படுத்துவதாக விழாவில் வலியுறுத்தப்பட்டது.
“2026 ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நோக்கி முன்னேறும் அனைத்து வீரர்களும் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாட வேண்டும்” என்று டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ (டாக்டர்) முகமது நோர்சா ஜகாரியா வாழ்த்துத் தெரிவித்தார்.
மேலும், “2025-2027 காலத்திற்கான SEAGF தலைவராக, 2027 மலேசியா SEA Games போட்டிகளில் செபக்டக்ரா முக்கிய அம்சமாக இடம்பெற முழுமையான ஆதரவை வழங்குவோம்” என்றும் அவர் உறுதியளித்தார்.
விழாவின் இறுதியில், TM ISTAF செபக்டக்ரா உலகக் கோப்பை 2026-இன் அதிகாரப்பூர்வ காணொளி மற்றும் “We Are The Nation” எனும் கருப்பொருள் பாடலுடன் கலாச்சார நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், உலகக் கோப்பை பிரதியை டத்தோ முகமது சுமாலி ரெடுவான், டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ (டாக்டர்) முகமது நோர்சா ஜகாரியாவிடம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, TMJ Mesra Travel and Tours Sdn. Bhd. நிறுவனத்தின் சார்பில் மலேசிய செபக்டக்ரா அகாடமிக்கு இரண்டு பேருந்துகள் நிதியுதவியாக வழங்கப்பட்ட நிகழ்வும் நடைபெற்றது.











