என் தமிழ்

நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு

மத்தியப் பிரதேசம்[இந்தியா], 17 மே 2026 : திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற ஹஸ்ரத் நிஸாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டம் அருகே நடைபெற்றது.

ரயில் எண் 12431 ஆக இயங்கும் ராஜ்தானி எக்ஸ்பிரஸின் B-1 ஏசி பெட்டியில் அதிகாலை சுமார் 5.15 மணியளவில் திடீரென தீப்பற்றியது. லூனி ரிச்சா மற்றும் விக்ரம்கர் ஆலோட் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றுகொண்டிருந்தபோது புகை வெளியேறியதை கவனித்த பணியாளர்கள் உடனடியாக அவசர நடவடிக்கை எடுத்தனர்.

இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, அந்த பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சுமார் 68 பயணிகள் சில நிமிடங்களுக்குள் பத்திரமாக மீட்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

தீ மேலும் பரவாமல் இருக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், தீப்பற்றிய பெட்டி ரயிலிலிருந்து பிரிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தால் மும்பை – டெல்லி முக்கிய ரயில் பாதையில் சில மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

இதற்கிடையில், சம்பவ இடத்துக்கு பழுதுபார்ப்பு பணிக்குச் சென்ற ரயில்வே ஊழியர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Scroll to Top