அராவ், 17 மே 2026 : மொஹ்த் காலித் ஹாஜி இஸ்மாயில், பெர்லிஸ் மாநிலத்தின் உயரிய இரண்டாம் நிலை விருதான செரி படுகா மகோட்டா பெர்லிஸ் (S.P.M.P.) விருதினால் கௌரவிக்கப்பட்டார். இந்த விருது அவருக்கு “டத்தோ ஸ்ரீ” என்ற பட்டத்தையும் வழங்குகிறது.
பெர்லிஸ் மன்னர் துவாங்கு சையித் சிராஜுடின் ஜமாலுல்லைல் அவர்களின் 83ஆவது அதிகாரப்பூர்வ பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, அராவ் அரண்மனையின் பாலையிரோங் செரி மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு விருது வழங்கும் விழாவில் இந்த கௌரவம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பெர்லிஸ் மகாராணி துவாங்கு தெங்கு ஃபௌஸியா, பெர்லிஸ் இளவரசர் துவாங்கு சையித் ஃபைஸுடின் புத்ரா மற்றும் இளவரசி துவாங்கு டாக்டர் ஹஜ்ஜா ஷஹ்ரீன் அகாஷா கலீல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
S.P.M.P. விருது, நாட்டிற்கும் மாநிலத்திற்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு வழங்கப்படும் பெர்லிஸ் மாநிலத்தின் முக்கியமான விருதுகளில் ஒன்றாகும்.
இந்த விழாவில் தேசிய தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார், ஆயுதப்படைத் தளபதி ஜெனரல் மாலேக் ரசாக் சுலைமான் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் அதே விருதைப் பெற்றனர்.
மேலும், முன்னாள் தேசிய காவல்துறைத் தலைவர் ரசாருடின் ஹுசைன் மற்றும் பொது சேவைத் துறை இயக்குநர் வான் அஹ்மத் டஹ்லான் அப்துல் அசீஸ் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
மொத்தமாக 21 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டிற்கும் மாநிலத்திற்கும் ஆற்றிய சேவைகளை பாராட்டும் வகையில் இந்த கௌரவம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாலை நேரத்தில் பெர்லிஸ் மன்னரின் 83ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அராவ் அரண்மனையில் நடைபெறும் விருந்துபசார நிகழ்ச்சியிலும் டத்தோ ஸ்ரீ முகமது காலித் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Photos and Information : PDRM











