என் தமிழ்

RM70 மில்லியன் வாடகைப் பாக்கி: PPR குடியிருப்பாளர்களுடன் PPP – DBKL அவசர சந்திப்பு

கோலாலம்பூர், 15 மே 2026 : PPP சிகாம்புட் மற்றும் PPP கெப்போங் அமைப்புகள், குடியிருப்பாளர் பிரதிநிதிகள் மற்றும் கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) இணைந்து, PPR ஸ்ரீ அமான் குடியிருப்பாளர்களுடன் வீட்டு வாடகைப் பாக்கி மேலாண்மை குறித்த கலந்துரையாடல் அமர்வை PPR ஸ்ரீ அமான் மண்டபத்தில் நடத்தியது.

இந்த நிகழ்வில், DBKL நகர்ப்புற நல்வாழ்வு சமூக மேம்பாட்டுத் துறையின் துணை இயக்குநர் அஹ்மத் இப்னு சினா பின் தெர்மிஸி தனது குழுவினருடன் கலந்து கொண்டு, குடியிருப்பாளர்கள் வாடகைப் பாக்கியை தவணை முறையில் செலுத்தும் வகையில் ஆலோசனைகள் மற்றும் ஏற்பாடுகள் மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் PPP கூட்டரசு பிரதேசத் தலைவர் சத்யா சுதாகரன், PPP சிகாம்புட் பிரிவுத் தலைவர் டத்தோ வினோத், PPP கெப்போங் பிரிவுத் தலைவர் எல். ராஜேந்திரன், PPP பத்து பிரிவுத் தலைவர் ஜே.கே. மகேந்திரன், PPP மகளிர் பிரிவுத் தலைவர் திருமதி நளினி மற்றும் PPP தகவல் பிரிவுத் தலைவர் முகமது ரிட்ஜுவான் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அதேவேளை, சமூக மேம்பாடு மற்றும் நகர்ப்புற நலவாழ்வுத் துறையின் இயக்குநர் துவான் கைருல் அனுவார் முகமது ஜூரிக்கும் சத்யா சுதாகரன் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

DBKL தரவுகளின்படி, கோலாலம்பூரிலுள்ள PA மற்றும் PPR வீடுகளுக்கான மொத்த வாடகைப் பாக்கித் தொகை தற்போது RM70 மில்லியனை எட்டியுள்ளது. இந்த நிலைமை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பெரும் சுமையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, PPR ஸ்ரீ அமான் குடியிருப்பாளர்கள் தங்களது வாடகைப் பாக்கியை படிப்படியாக செலுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இந்த கலந்துரையாடல் அமர்வு சுமூகமாக நடைபெற்றதாக சத்யா சுதாகரன் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் வருமான இழப்பினால் பல குடும்பங்கள் வாடகை செலுத்துவதில் சிரமம் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மித்ரா அமைப்பிற்கு கூடுதலாக RM50 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ள நிலையில், அந்த நிதியின் மூலம் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் கூடுதல் கால அவகாசம் வழங்கி, அவர்கள் தவணை முறையில் வாடகைத் தொகையை செலுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Scroll to Top