கோலாலம்பூர், 15 மே 2026 : பள்ளி மாணவர்களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், MyLesen B2 Sekolah (MyB2S) 2026 சிறப்பு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 60,000 பள்ளி மாணவர்களுக்கு B2 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மலேசிய அரசாங்கத்தின் இந்த திட்டத்திற்கு RM18.5 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக B40 குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக B2 உரிமம் பெறும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
இந்த திட்டம், சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) மற்றும் கல்வி அமைச்சு (KPM) இணைந்து செயல்படுத்தும் ஒரு மூலோபாய முயற்சியாகும்.
MyB2S திட்டத்தின் முக்கிய நோக்கங்களில், மாணவர்களிடையே சாலைப் பாதுகாப்பு கலாச்சாரத்தை வலுப்படுத்துதல், சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வையும் சட்ட இணக்கத்தையும் மேம்படுத்துதல் மற்றும் மாணவர்களின் ஓட்டுநர் திறனை உயர்த்துதல் ஆகியவை அடங்கும்.
மேலும், தற்போது நடைமுறையில் உள்ள MyLesen B2 திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையிலும் இந்த புதிய முயற்சி அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூலம், இளைஞர்கள் சட்டப்படி செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதோடு, பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சாலைப் பயனாளர்களாக உருவாகும் வாய்ப்பும் அதிகரிக்கும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.






